‛பிகில்’ தயாரிப்பாளர் அர்ச்சனா, வருமான வரித் துறை முன் ஆஜர்

விஜய் நடித்து வெளிவந்த ‘பிகில்’ படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி குவித்தது. ஆனால் வருமான வரித்துறைக்கு திரைப்படத்தை தயாரித்த நிறுவனம் சரியாக கணக்கு காட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதை தொடர்ந்து,ஏஜிஎஸ்., நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் விஜய் ஆகியோரின் வீடு, அலுவலங்கள் உட்பட 38 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடுகளில் இருந்து, கணக்கில் வராத 77 கோடி ரொக்கம், பல ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்க்கு ஏஜிஎஸ் திரைப்பட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி, திரைப்படத்தை விநியோக உரிமம் பெற்ற ‘ஸ்கிரீன் கிரீன்’ உரிமையாளர் சுந்தர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் அன்புச்செழியன், விஜய் சார்பில் அவரது ஆடிட்டர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத்தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி நேற்று தனது ஆடிட்டர்களுடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பிகில் படத்தின் வரவு, செலவு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தன் தரப்பு ஆவணங்களை அவர் வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*