‛இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து: 3பேர் பலி

கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட மூன்று பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு, சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள, ஈ.வி.பி., பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. படத்தின் பாடல் காட்சிக்காக, பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள், நேற்று மாலை முதல் நடந்து வந்தன. அப்போது, ராட்சத கிரேன் ஒன்று, அறுந்து விழுந்ததில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, கலை உதவியாளர் சந்திரன் மற்றும் தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கமல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன். முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது. இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*