அடுத்தடுத்து காவு வாங்குகிறதா படப்பிடிப்பு தளம்?

நடிகர் கமல் நடித்து வரும், இந்தியன்- 2 படப்பிடிப்பு தளத்தில் 3 பேர் உயிரிழந்த தனியார் பிலிம் சிட்டியில் விபத்து நடப்பது இது முதல்முறை அல்ல. பொழுதுபோக்கு பூங்கா இருந்த போது கிரேன் அறுந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்ட பின்னர் நடந்த படப்பிடிப்புகளின் போது பலர் உயிரிழந்தனர்.

சென்னை, பூந்தமல்லியை அடுத்த பழஞ்சூர் பாப்பான்சத்திரத்தில் கடந்த 2012ம் ஆண்டு இந்த பொழுதுபோக்கு பூங்கா துவங்கப்பட்டது. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பூங்கா துவங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, துவங்கிய வேகத்திலேயே மூடப்பட்டது.

2012 ஏப்ரல் மாதம் 23ல் சென்னை சின்மயா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், செப்., மாதம், தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த 16 வயது சிறுவன் சறுக்கு விளையாடிய போது, தவறி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தொடர்ந்து, அதே ஆண்டு அக்.,1ம் திகதி நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த அபியா மேக்(25) என்ற விமான பணிப்பெண், ஆக்டோபஸ் ராட்டினத்தில் சுற்றிய போது தவறி விழுந்து இறந்தார். இதனால், இந்த பூங்கா மீது விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மூடப்பட்டது. சிறிது மாதங்களுக்கு பின் படப்பிடிப்புதளமாக மாற்றப்பட்டது.

படப்பிடிப்பு தளமாக மாறினாலும், அங்கு விபத்துகள் தொடர்வதை யாராலும் மாற்ற முடியவில்லை. இந்த படப்பிடிப்பு தளத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்ற இரண்டு நடிகைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இது குறித்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதன் பின் படப்பிடிப்பு தளத்தில், ரஜினி நடித்த காலா படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகினார். மற்றொருவர், அங்கிருந்த கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படப்பிடிப்பின் போதும், கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் பலியாகினார்.

தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் கவிழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு படத்திற்கும் செட் அமைக்கும் போது உயிரிழப்பு ஏற்படுவது திரைத்துறையினர் மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*