‘வானம் கொட்டட்டும்’ திரை விமர்சனம்

வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டரில் பார்த்தேன்.

நான் ஒரு திரைப்படப் பிரியன்.மாணவனாக இருந்த காலத்தில் காலை 10.30 மணிப் படத்திற்கு, 9.00 மணிக்கே கால் உழைய உழைய போய் தியேட்டர் படலையில் நிற்பவன்.

அந்த ஆர்வம் இப்பவும் அப்படியேதானிருக்கிறது.அகலத் திரையில் பார்ப்பதில் தனிச் சுகமேயிருக்கிறது.

அதிலும் ஒரு சூடான ஒரு கோப்பியை வாங்கி அதைக் குடித்தபடியும் சோளன் பொரியை வாயில் போட்டு மெதுவாக சர்சர்ரென சப்பிச் சாப்பிட்டபடி பார்ப்பதில் அது வேறு ஒரு சுகம்.

அதற்காக நான் எந்த நடிகனின் விசிறியுமல்ல திரைப்பட வெறியனுமல்ல.

வானம் கொட்டட்டும் என்ற படம் நல்ல படம் என்ற ஒரு செய்தி காதில் விழுந்தது.நான் மருமகனுடன் படம் பார்க்கப் போயிருந்தேன்.

நாங்கள் ஒரு உணவு விடுதிக்குச் சாப்பிடப் போகிறோம் என்று வைத்துக் கொண்டால், அங்குள்ள உணவுகளில் எது சுவையானது எதை இரசித்துச் சாப்பிடலாம் அவ்வுணவிலுள்ள காய்கறிகள் இறைச்சி அல்லது மீன் வகைகள் என்ன இதமான சுவையைத்தரும் என ஒரு மனக் கணக்குப் போட்டுப் பார்த்து எமக்கு விருப்பமான உணவுக்குச் சொல்லிச் சாப்பிடுவோம்.

அப்படிச் சாப்பிடும் உணவுகளில்கூட சில சாப்பிடும் வரை கலாதியாக சுவையாகவிருக்கும்.ஆனால் உணவு விடுதியைவிட்டு வெளியே வந்ததும் அதுபற்றி சுவையாக பேச இயலாதவாறு தற்காலிக சுவையாகவிருக்கும் அவை.

ஆனால் இன்னும் சில உணவுகளோ, வருடக்கணக்கானாலும் நாக்கில் அவற்றின் சுவை தங்கி நிற்கும்.

பல படங்களைப் பார்க்கிறோம், சில மனதை கொள்ளை கொள்ளும்,சில மனதைவிட்டு படிப்படியாக நீங்கிவிடும்.

ஆனால் பல படங்கள் பலவாண்டுகள் கழிந்தாலும் அந்த நினைவுகள் அப்படியேதானிருக்கும்.

அப்படித்தான் வானம் கொட்டட்டும் என்ற திரைப்படமும்.

மணிரத்தினத்தின் தயாரிப்பிலும் தனசேகரனின் இயக்கத்திலும் உருவான இத்திரைப்படத்தில் சரத்குமார்,ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராயேஸ்,ஜி.வி.பிரகாஸ், நந்தா, சாந்தனு,இயக்குனர் பாலாஜி சக்திவேல், பாடகர் சிறீராம் என இன்னும் பலர் நடித்திருந்தனர்.

தேர்தல் காரணமாக சரத்குமாரின் அண்ணனை வெட்டுவதும் அவர் உயிர் தப்பிய போதும்,தனது அண்ணனை வெட்டியவர்களில் இருவரை சரத்குமார் வெட்டிக் கொலை செய்ய, அவர் சிறை செல்ல என ஆரம்பித்த கதையோட்டம் ஒரு புதிய பார்வைக்கூடாகவும் நேர்த்தியான தன்மைக்கூடாகவும் நகர்ந்து சென்று முடிவடைகிறது.

நடிகர்களைத் தேர்வு செய்ததில் தனசேகர் வெற்றியடைந்துவிட்டார் என்றே சொல்லலாம்.உணவுகளில் உப்பு, புளி, உறைப்பு, தாளிதம் என்பன மூலப்பொருளின் தன்மைக்கேற்றதாகவும்,இந்த உணவை இந்தக் கொதிநிலையில்தான் சமைக்க வேண்டும் என்பததற்கமைய கைதேர்ந்த சமையல்காரனின் வித்தையாக இருக்கும்.

அது போன்றதுதான் இந்தக் காட்சியில் இவ்வளவுதான் நடிப்பு இருக்க வேண்டும், முகபாவனை, உடல்மொழி, உரையாடல்களின் மூலம் வெளிப்பட்டு நிற்கும் உணர்வுகள் உணர்ச்சிகள், கதாபாத்திரங்கள் நிற்கும் இடம் அதனை ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிக் கருவியின்; கோணம் என்பன என எல்லாவற்றையுமே கவனத்தில் கொண்டு படத்தை எடுக்கும் போதுதான் படத்தைப் பார்க்கும் இரசிகன் அப்படத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இரசித்து இரசித்து உள்வாங்குவான்.

ஒரு நடிகரின் நடிப்புடன் இன்னொரு நடிகரின் நடிப்பை ஒப்பிட்டுப் பார்த்து கூடிக் குறைதலைக் கணக்கிட முடியாதபடி எல்லோரையும், இந்தக் காட்சியில் இவ்வளவு நடித்தால் போதும் என அடிமட்டமும் கையுமாக அளவெடுத்து நடிக்க வைத்தது போல நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

இப்படியும் உதாரணப்படுத்தலாம்,ஒருவர் அணியும் உடை எப்பொழுதும் அவரின் உடலுக்குப் பொருத்தமானதாகவிருக்க வேண்டும். தொளதொளவென்று இல்லாமலும் உடலோடு கடுமையாக ஒட்டி இறுக்கமாகவில்லாமலும் உடலுக்கும் உடைக்குமிடையில் அளவான இடைவெளியுடன் இருந்தால் பார்ப்பதற்கு கம்பீரமாகவிருக்கும்.

அப்படித்தான் இந்தப் படத்திலும் பாத்திரத்திரத்தின் தன்மை எதுவோ அதற்கமைய நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சரத்குமார,; ராதிகா ஆகியோர் நன்றாக நடிக்கக்கூடியவர்கள்தான் என்ற போதும், ராதிகாவின் நடிப்பு தனித்துவமாக இருப்பதைக் காண முடிந்தது.பானுமதி, கண்ணாம்பா, சாவித்திரி ஆகியோருக்கு இணையான நடிகை ராதிகா என நிரூபித்து வருகிறார்.ராதிகாவுக்கு பாத்திரமறிந்து நடிப்பது அத்துப்படி.ஏனென்றால் அவர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள்.அச்சுக்கூடத்தில் வேலை செய்யும் ராதிகாவின் நடிப்பும்,பிள்ளைகள் உறவுகள் என அவரவரின் உறவுத் தனமைக்கேற்ற நடிப்பு அருமையாகவிருக்கின்றது.

சிவாஜி கணேசனின் பேரனும்,பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவை கும்கி திரைப்படத்திற்குப் பிறகு யாருமே சரிவரப் பயன்படுத்தவில்லையோ என நான் நினைப்பதுண்டு.

ஆனால் இந்தப் படத்தில் இயக்குனர் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்.பாலாஜி சக்திவேலின் நடிப்பும், பாடகர் சிறீராமின் நடிப்பும் இன்னொரு தனிரகம்.

வாழைக்குலை வியாபாரம், வாழைப்பழ வியாபாரம் சார்ந்த காட்சிகள் சுவையாகச் சொல்லப்பட்டது மட்டுமல்ல கதையோட்டக் கட்டமைப்புக்குள் பொருட்களைக் காட்சிப்படுத்தலும், எக்கோணத்தில் காட்சிப்படுத்தினால் இரசிகன் இரசிப்பான் என்பதை இயக்குனர் தன்னை , பாத்திரங்களாகவும், இரசிகனாகவும்,பொருட்களாகவும் உருவகப்படுத்தி நல்லதொரு படைப்பைத் தந்திருக்கிறார்.

சமையல்காரன் எப்படித் உண்பவனின் மனநிலையில் தன்னை இருத்தி பார்ப்பது போன்றதுதான் இயக்குனரின் வேலை.

கதையின் மையக்கருத்து ஒவ்வொரு காட்சியுமா என வினவும் அளவுக்கு அதனதன் காத்திரத்தன்மையுடன் விரிவடைந்து,ஒவ்வொரு காட்சியும் தவிர்க்க முடியாதவை என எணணுமளவிற்கு நீட்டிமுழக்காமல் தவிர்க்க வேண்டியதை தவிர்த்து, நடிகர்களை பேசவேண்டிய அளவு பேச வைத்து நடிக்க வேண்டிய அளவு நடிக்க வைத்து எடுத்த படமாகையால் பலராலும் சுவைக்கக் கூடிய படமாக இப்படம் இருக்கின்றது.

நான் இந்தப் படத்தை நன்றாக இரசித்தேன்.எனக்குப் பிடித்த படம்.

Kandiah Murugathasan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*